சென்னை, பூந்தமல்லி கோர்ட்டுக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட அல் உம்மா இயக்க பயங்கரவாதிக்கு பென் டிரைவ் கொடுத்த இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு மற்றும் மதுரையில் பாஜ தலைவர் அத்வானியை கொல்ல முயன்ற வழக்கில் நெல்லையைச் சேர்ந்த கிச்சான் புகாரி, முகமது தாசின், கட்ட சாகுல் உட்பட 15 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸ் வேனில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டனர். நேற்று மதியம் சென்னை சென்னை பூந்தமல்லி கோர்ட்டில் போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற விசாரணை முடிந்து மாலை 4 மணியளவில், 15 பேரும் நீதிமன்ற வளாகத்திற்கு வந்தனர்.
அப்போது அங்கு வந்த இருவர் கிச்சான் புகாரியிடம் நைசாக ஒரு சிறிய பொருளை கொடுத்தனர். அதனைக் கண்ட போலீசார் உடனே அதனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அப்போது அது பென் டிரைவ் என தெரியவந்தது. அதனைக் கொடுத்த இருவரையும் பிடித்து போலீசார் பூந்தமல்லி போலீசில் ஒப்படைத்தனர்.
உதவிக்கமிஷனர் சுதர்சன் தலைமையில் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் கிச்சான் புகாரியிடம் பென் டிரைவ்வை கொடுத்தது கிழக்கு தாம்பரம், மசூதி காலனியைச் சேர்ந்த சையது இபுராஹிம் (வயது 52), கானத்துாரைச் சேர்ந்த இம்ரான் (வயது 35) என்பது தெரியவந்தது. அதனையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார் சையது இப்ராஹிம், இம்ரான் ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் நீதிமன்றக்காவலில் சிறையில் அடைத்தனர்.
நெல்லை அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதியான கிச்சான் புகாரி மற்றும் அவரது கூட்டாளி பறவை பாதுஷா ஆகியோர் தொண்டு நிறுவனம் போர்வையில் நெல்லை மேலப்பாளையத்தில் இருந்து கொண்டு தமிழகத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கடந்த 2013ம் ஆண்டு தமிழக சிபிசிஐடி சிறப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக கிச்சான் புகாரியின் நெல்லை மேலப்பாளையம் வீட்டில் இருந்து ஏராளமான வெடிமருந்து பொருள்களும், டெட்டனேட்டர்களை போலீசார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.