விழுப்புரம்,
அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 690 தொழிலாளர்களுக்கு ரூ.96 கோடி பணப்பலன்களை அமைச்சர் சி.வி. சண்முகம் வழங்கினார்.
விழுப்புரம் அரசு சட்ட கல்லூரி கலை அரங்கத்தில் போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன் காசோலை வழங்கும் விழா நடைபெற்றது.
இதற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார். அமைச்சர் சி.வி.சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 690 பணியாளர்களுக்கு ரூ.96 கோடியே 19 லட்சம் மதிப்பில் காசோலைகளை வழங்கினார்.
கொரானா தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக பொருளாதார பாதிப்பை நாம் சந்தித்தோம். இந்த காலக்கட்டத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் சிறப்பாக பணி செய்தனர். அதற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பண பயனை பெறும் நீங்கள் வாழ்க்கையில் மீதமுள்ள காலத்தை மிகவும் அமைதியான முறையில் அமைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். நிகழ்ச்சியில் மிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி ஆகிய போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பயன்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பிசிங், எம்.எல்.ஏ.க்கள் குமரகுரு, பிரபு, முத்தமிழ்ச் செல்வன், ஆவின் தலைவர் பேட்டை முருகன், ஒன்றியச் செயலாளர்கள் ராமதாஸ், சுரேஷ்பாபு, ராஜா, மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் வண்டிமேடு ராமதாஸ், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பிரஸ் குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.