போராட்டத்தில் ஈடுபட்டால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மியான்மர் ராணுவம் எச்சரிக்கை

ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மியான்மர் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேபிடாவ்

மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைண்ட் உள்பட 100-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, தன் ராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது மியான்மர் ராணுவம்.

ஆனால் மியான்மர் மக்கள் ராணுவ ஆட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை. நாட்டில் ஜனநாயகம் மீட்கப்பட வேண்டும் என்று கோரி கடந்த 10 நாட்களாக அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ராணுவ ஆட்சிக்கு எதிராகவும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.

இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருவது ராணுவத்துக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. எனவே போராட்டத்தை ஒடுக்குவதற்கு ராணுவம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ராணுவ ஆட்சியை எதிர்ப்பவர்களை ஒடுக்க தயாராகும் விதத்தில் மியான்மரின் பல நகரங்களில் ஆயுதமேந்திய ராணுவ வாகனங்கள் வலம் வரத்தொடங்கியுள்ளன.

ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடந்து வரும் தலைநகர் நேபிடாவ், யாங்கூன், மாண்டலே ஆகிய நகரங்களின் முக்கிய சாலைகளில் ஆயுதமேந்திய ராணுவ வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.

இதற்கிடையில் போராட்டம் குறித்த செய்திகள் மற்றும் தகவல்கள் பரவுவதை தடுக்கும் விதமாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நாடு முழுவதும் மீண்டும் இணைய சேவை முடக்கப்பட்டது. இப்படி ராணுவம் தனது பிடியை இறுக்கி வந்தாலும் அதற்கு எதிரான மக்களின் போராட்டம் தொடரத்தான் செய்கிறது.

நேற்றும் மியான்மரின் பல்வேறு முக்கிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிரான முழக்கங்களை எழுப்பிய படி பேரணியாக சென்றனர். மக்களின் போராட்டம் ஒருபுறம் இருக்க, ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் மீண்டும் ஆட்சி பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என சர்வதேச நாடுகள் மியான்மர் ராணுவத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இதற்கிடையே, மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவர்களுக்கு  20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டு ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளதுமேலும், ராணுவ அதிகாரிகளுக்கு எதிரான கருத்துக்களை பரப்புவர்களுக்கு நீண்ட கால சிறை தண்டனை, அபராதம் ஆகியவை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது

 

 

Translate »
error: Content is protected !!