போராட்டம்: ஸ்டாலின் உள்ளிட்ட 3500 பேர் மீது வழக்குப்பதிவு

நீட் உள் ஒதுக்கீடு தொடர்பாக சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் போராட்டத்தில் பங்கேற்ற 3500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் அரசின் மசோதாவுக்கு ஒப்புதல் தர வலியுறுத்தி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. ஸ்டாலின் தலைமையில் ஆளுநரையும் தமிழக முதல்வரையும் கண்டித்து, சின்னமலை ராஜீவ் காந்தி சிலை முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி., இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தி.மு.க பொருளாளர், டி.ஆர்.பாலு, சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் 4,000-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் இதில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு திமுக போராட்டம் நடத்திய விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் போராட்டத்தில் பங்கேற்ற 3500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கிண்டி காவல்நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Translate »
error: Content is protected !!