போலி ஆவணம் தயாரித்து நிலமோசடியில் ஈடுபட்ட இருவரை சென்னை அடையாறு போலீசார் கைது செய்தனர்.
சென்னை, கிழக்குத் தாம்பரத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 65). இவர் அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமனை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘‘சென்னை, அடையாறு, கஸ்துாரிபாய் நகரில் 2,880 சதுர அடி அளவிலான சுமார் 4 கோடி மதிப்புள்ள நிலம் உள்ளது. அதன் உரிமையாளர் எவாலின் கேளிப் கடந்த 1989 ஆம் ஆண்டு இறந்து விட்டார். அவரின் வாரிசுதாரரான உறவினர் நிர்மலின் சந்திரிகா ப்யூட்லர் என்பவர் பெயரில் பட்டா பெற்றுள்ளனர்.
அவர் ஆஸ்திரேலியா நாட்டில் வசித்து வருகிறார். அதனை நான் பராமரித்து வருகிறேன். இந்நிலையில் அந்த நிலத்தினை நேசன் டிக்சன் கிரிஸ்டோபர் என்ற பெயருக்கு பவர் ஆப் அட்டாணி மாற்றப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி அடையாறு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நிலத்தை மோசடி செய்து அபகரித்துள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அந்த புகாரில் கூறியிருந்தார். அந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தும்படி துணைக்கமிஷனர் விக்ரமன் அடையாறு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மனோகருக்கு உத்தரவிட்டார்.
போலீசார் நடத்திய விசாரணையில் 1989 ஆம் ஆண்டே இறந்து விட்ட எவாலின் கேளிப் என்பவர் டிக்சன் கிரிஸ்டோபர் என்ற பெயருக்கு அந்த மனையை விற்க மற்றும் அனுபவிக்க ஒப்பந்தம் செய்தது போல் போலியான ஆவணங்கள் தயார் செய்து சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளது தெரியவந்தது. மேலும் டிக்சன் கிறிஸ்டோபர் என்பவர் அதை தனது கூட்டாளியான சிவசங்கர் என்ற நபருக்கு விற்பனை செய்வதற்காகாக விண்ணப்பித்திருப்பதும் தெரிய வந்தது. அதனையடுத்து போலீசார் சாலிகிராமத்தைச் சேர்ந்த நேசன் டிக்சன் கிரிஸ்டோபர் (வயது 44), சிவசங்கர் (வயது 45) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.