போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பினர் 100 பேர் கைது

புதுக்கோட்டை:

தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் பசுபதிபாண்டியன் கூட்டமைப்பு சார்பில் பட்டியலினத்தவரை தேவேந்திர குல வேளாளராக அறிவிக்கக் கோரி புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் தடை விதித்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்திருந்த மாநில தலைவர் பார்வதி சண்முகசாமி புதுக்கோட்டையில் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு தங்கினார். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவரை வெளியே விடாமல் தடுத்து நிறுத்தி கைது செய்ய ஏராளமான போலீசார் நேற்று காலை அந்த ஓட்டல் முன்பு எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் குவிக்கப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக ஓட்டல் முன்பு அமைப்பை சேர்ந்தவர்கள் கையில் கொடியுடன் திரண்டனர்.  போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த புறப்பட்டு செல்ல முயன்ற பார்வதி சண்முகசாமியிடம் டவுன் டிஎஸ்பி செந்தில்குமார், டவுன் இன்ஸ்பெக்டர் குருநாதன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் முடிவு எட்டாத நிலையில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்த புறப்பட்டு சென்ற சண்முகசாமி உள்ளிட்ட 100 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவர்களை வேனில் ஏற்றி சென்று அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். கைதானவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் புதுக்கோட்டை பஸ் நிலையம் அருகே நேற்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

Translate »
error: Content is protected !!