போலீசிடம் நாடமாடிய செல்போன் கொள்ளையன்

சென்னை திருவல்லிக்கேணியில் தன்னைத் தாக்கி செல்போன் திருடியதாக போலீசில் நாடகமாடிய கொள்ளையன் புத்திசாலித்தனமாக ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, திருவல்லிக்கேணி, வல்லபா அக்ரஹாரம் தெருவில் தனியார் தங்கும் விடுதிக்கு எதிரில் வாலிபர் ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இது தொடர்பாக அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு அந்த வாலிபர் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் காயம் பட்ட நபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர்
திருவல்லிக்கேணி, அன்னை சத்யா நகரைச் சேர்ந்த மோசஸ் என்பது தெரியவந்துள்ளது. போலீசார் விசாரணையில் தன்னை மர்ம நபர்கள் தாக்கி செல்போனை பறித்துச் சென்று விட்டனர் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அதிர்ச்சித்தகவல்கள் தெரியவந்தன.

காயம்பட்ட மோசஸ் தான் செல்போன் திருடும் திருடன் எனவும், அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த நபரிடம் மோசஸ் செல்போனை திருடியதும், செல்போன் பறிகொடுத்தவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து மோசஸை தாக்கி செல்போனை வாங்கிச் சென்றதும் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக தன்னைத் தாக்கி செல்போனை பறித்து சென்றதாக நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மோசசை போலீசார் கைது செய்ய சென்ற போது, மருத்துவமனையிலிருந்து தப்பித்து விட்டது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!