கே.கே.நகரில் போலீஸ் அதிகாரிகள் எனக்கூறி வீட்டினுள் நுழைந்து பணம், தங்க நகைகள் மற்றும் காரை அபகரித்துச் சென்ற வழக்கில் மேலும் 3 குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை, அசோக்நகர், 79வது தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன், 49. கடந்த 09.12.2020 அன்று மதியம் சுமார் 8 நபர்கள் பாண்டியனின் வீட்டிற்குள் நுழைந்து, தாங்கள் போலீஸ் என்றும், அவரது வீட்டில் துப்பாக்கி உள்ளதாக புகார் வந்துள்ளதால் சோதனை மேற்கொள்ள வேண்டும் என மிரட்டினர். பாண்டியன் அவரது குடும்பத்தினரை வீட்டிலுள்ள ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு, வீட்டிலிருந்த 43 சவரன் தங்க நகைகள், பணம் ரூ. 12 லட்சம், செல்போன்கள் -3 மற்றும் கார் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர். இது தொடர்பாக பாண்டியன் கே.கே. நகர் போலீசில் புகார் அளித்தார்.
அது தொடர்பாக தி.நகர் துணைக்கமிஷனர் ஹரிகிரன் பிரசாத் மேற்பார்வையில், அசோக்நகர் உதவிக்கமிஷனர் பிராங்க் டி ரூபன் கே.கே. நகர் போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் குற்றவாளிகள் பயன்படுத்திய 3 கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தின் பதிவெண் மற்றும் அடையாளங்களை கொண்டும் போலீசார் புலனாய்வு மேற்கொண்டனர். தி.நகர் மாவட்ட சைபர் குற்றப்பிரிவினரின் தொழில்நுட்பங்களை கையாண்டு, மேற்படி குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் அசோக்நகரைச் சேர்ந்த சிவா, திருவொற்றியூர் அந்தோணி ஆம்பி லாம்பு (எ) ரூபன், ராஜேந்திரன் (எ) ரவி, சதிஷ், அஜித்குமார், ஆகிய 5 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரர் கார் உட்பட 4 கார்கள், 1 இருசக்கர வாகனம், 5 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், சிவா என்பவர் தொடர்ச்சியாக கண்காணித்து, பாண்டியன் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டு, பூமிநாதன் மற்றும் சிலருடன் சேர்ந்து மேற்படி குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான பூமிநாதன் என்பவரை பிடித்து, களவு பொருட்களை மீட்க காவல் குழுவினர் விரைந்துள்ளனர். விசாரணைக்குப் பின்னர் 5 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இவ்வழக்கில் தலைமறைவாகவிருந்த தர்மபுரி செந்தமிழ்செல்வன், சேலத்தைச் சேர்ந்த அரவிந்த், சுகனேஸ்வரன் ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளை கைது செய்ய காவல் குழுவினர் விரைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.