சென்னை தாம்பரம் மற்றும் அம்பத்துாரில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற தந்தை மற்றும் குழந்தைகள் இல்ல காவலாளி ஆகியோரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
சென்னை, பரங்கிமலையில் வசித்து வரும் பெண் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகாரில் தனது 9 வயது மகளை தனது கணவர் சங்கர் (வயது 39) குடிபோதையில் பாலியல் தொல்லை செய்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன்பேரில் தாம்பரம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை செய்தனர். அப்போது மனைவி வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது அவரது கணவர் 9 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மை என தெரியவந்தது. அதனையடுத்து போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து மகளிடம் தவறாக நடக்க முயற்சித்த சங்கரை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல ஆவடி பகுதியில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருந்த 12 வயது சிறுமியிடம் குழந்தைகள் இல்லத்தின் காவலாளி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குழந்தைகள் நலக்குழுமத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் அம்பத்துார் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி காவலாளி திருவண்ணாமலையைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவரை போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கைது செய்தனர். விசாரணைக்குப்பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.