குடும்பப் பிரச்சினை காரணமாக பெற்ற மகன், மகளைக் ஈவு இரக்கமின்றி கொலை செய்து விட்டு தலைமறைவாகிய வக்கீலை சென்னை மதுரவாயல் போலீசார் ஐந்து ஆண்டுகள் தேடுதல் வேட்டைக்குப்பின்னர் நேற்று கைது செய்துள்ளனர்.
சென்னை மதுரவாயலைச் சேர்ந்தவர் ரவி (56). வக்கீலாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மகேஷ்வரி. இவர்களுக்க ஐஸ்வர்யா பிரியதர்ஷினி (13), மகன் ஜெயகிருஷ்ணன் பிரபு (11) என்ற குழந்தைகள் உள்ளனர். ரவியின் மனைவி மகேஷ்வரியும் வக்கீலாக பயிற்சி எடுத்து வந்தார். இந்நிலையில் மகேஷ்வரியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. குடித்து விட்டு வந்து அடித்துக் கொடுமைப்படுத்தியதால் மகேஷ்வரி கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் தனது இரு குழந்தைகளையும் கணவர் ரவியின் பொறுப்பில் விட்டுவிட்டு தாய் வீட்டிற்குச் சென்று விட்டார்.
இதனால் ரவி தினமும் குடி போதையில் வந்து குழந்தைகளை அடித்து உதைத்து, பள்ளிக்கு கூட குழந்தைகளை செல்லவிடாமல் வீட்டுக்குள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். மனைவி மகேஷ்வரியை அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டு தன்னுடன் வாழ அழைத்துள்ளார். அவர் வர மறுத்துள்ளார். வரவில்லை என்றால் குழந்தைகளைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டி வந்துள்ளார். ஆனால் மகேஷ்வரி வர மறுத்ததால் விரக்தியடைந்த ரவி 2015-ம் ஆண்டு மே மாதம் 30-ம் தேதி தனது இரு குழந்தைகளையும் கழுத்தை அறுத்துக் கொன்று விட்டு தப்பிச் சென்றார். மூன்று நாட்கள் கழிந்த நிலையில் ஜூன் 3-ம் தேதி பூட்டப்பட்ட வீட்டிலிருந்து துர்நாற்றம் வரவே அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அங்கு சென்ற மதுரவாயல் போலீஸார் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பெட்ரூம் கட்டிலில் இரண்டு குழந்தைகளும் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளனர். இது தொடர்பாக மதுரவாயல் போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த தந்தை ரவியைத் தேடி வந்தனர்.
ரவி தனது காரில் ஆந்திரா வழியாக ஒடிசா மாநிலத்துக்கு தப்பிச் சென்று விட்டார். அங்கு ரயில் நிலையத்தில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுத்த பின்னர் அங்கிருந்து ரயில் மூலம் டில்லிக்கு தப்பிச் சென்று விட்டார். டெல்லியிலிருந்து அவர் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியாததால் அவரை கடந்த 5 ஆண்டுகளாக பிடிக்க முடியாமல் தேடிவந்தனர். இந்நிலையில் ரவி சென்னை பெரியமேட்டில் தங்கியிருப்பதை செல்போன் டவர் மூலம் கண்டுபிடித்த போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். இவ்வழக்கில் திறமையாக செயல்பட்டு 5 ஆண்டுகளாக விடா முயற்சியாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த தனிப்படையினரை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார்.