மதுரையில் நடுவானில் பறந்தபடி விமானத்தில் நடந்த வித்தியாசமான ‘டும்டும்’

மதுரையைச் சேர்ந்தவர் ராகேஷ். இவருக்கும் மதுரையைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் தீச்சனாவுக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். திருமணத்துக்கு நாள் குறிக்க முயன்ற போது லாக்டவுண் பிரச்சினை வந்து மூக்கை நீட்டியது. அதனால் கொரோனாவுக்கு தகுந்தாற்போல் விழா நடக்க வேண்டும், அதே சமயத்தில் கிராண்ட் ஆக நடக்க வேண்டும் என இரு வீட்டாரும் யோசித்தனர். அதனையடுத்து விமானத்தில் பறந்தபடி வித்தியாசமான திருமணம் நடத்த முடிவு செய்தனர்.

மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு முன்பதிவு செய்தனர். இன்று விமானத்தில் திருமணம் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்தனர். அதன்படி இன்று காலை 7.30 மணி அளவில் விமானம் மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டது. மணமகன் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் 161 பேர் பயணம் செய்ய விமானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. பட்டுவேட்டி பட்டுச் சட்டையுடன் மாப்பிள்ளை ராகேஷும், பட்டுச்சேலை மணமகள் அலங்காரத்துடன் தீச்சனாவும் விமானத்தில் ஏறினர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது உறவினர்கள் முன்னிலையில் மணமக்கள் ராகேஷ் – தீச்சனாவுக்கு திருமணம் மங்களகரமாக நடைபெற்றது. காலை 9 மணியளவில் விமானம் மீண்டும் மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. மதுரையில் வித்தியாசமான முறையில் நடைபெற்ற இந்த திருமணம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. திருமணத்திற்காக விமானத்தில் சென்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின் தான் விமானத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

Translate »
error: Content is protected !!