மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே லாரி மீது மினி வேன் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி பாரம் ஏற்றிக்கொண்டு திண்டுக்கல்லுக்கு டாரஸ் லாரி புறப்பட்டது. இதனை தூத்துக்குடி வெற்றிவேல் (வயது22) ஓட்டிச்சென்றார். இன்று அதிகாலை அந்த லாரி மதுரை மாவட்டம் திருமங்கலம் சுற்றுச்சாலை பகுதியில் வந்து கொண்டிருந்தது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் எதிரே லாரி வந்த போது அதன் டயர் வெடித்தது. இதனால் லாரி நிலை தடுமாறி ஓடியது. இருப்பினும் டிரைவர் வெற்றிவேல் லாரியை சாலையோரத்தில் நிறுத்த முயன்றார். அப்போது பின்னால் வந்த மினி வேன் லாரி மீது மோதியது.
இதில் மினி வேனின் முன் பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. அந்த வேன் திருமங்கலத்திற்கு பிராய்லர் கோழிகளை ஏற்றி வந்துள்ளது. விபத்தில் வேனில் வந்த கீழஉரப்பனூர் கவின் (27), உசிலம்பட்டி அருகே உள்ள நக்கலப்பட்டியைச் சேர்ந்த சிலம்பரசன் (27), குதிரைசாரி குளம் விஜய் (23) ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்றனர். அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கவின், சிலம்பரசன் ஆகியோர் பலியாகி இருப்பது தெரியவந்தது.
பலத்த காயத்துடன் விஜய் மீட்கப்பட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டார். விபத்து குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.