மதுபோதையில் அரசு பேருந்தை தாக்கி கண்ணாடியை உடைத்த குற்றத்திற்காக இரண்டு இளைஞர்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு.
தேனி மாவட்டம் 18.01.2012 ஆம் ஆண்டு போடி அருகே உள்ள சங்கராபுரத்தை சேர்ந்த ராஜா மற்றும் பூங்கொடி என்ற பூபதி ஆகிய இரண்டு இளைஞர்களும் சேர்ந்து சங்கராபுரத்தில் இருந்து தேவாரம் பகுதிக்கு செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறியுள்ளனர். இவர்களுக்கும் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட போது இரண்டு இளைஞர்களும் மது போதையில் இருந்ததால் அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடை பெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்து பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய குற்றத்திற்காக ராஜா மற்றும் பூங்கொடி என்ற பூபதி ஆகிய இரண்டு இளைஞர்களுக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், இருவருக்கும் தலா 5,000 ரூபாய் அபராதமும் அதை கட்டத் தவறினால் மேலும் 6 மாத சிறைத்தண்டனையும் விதித்து மாவட்ட அமர்வு நீதிபதி விஜயா தீர்ப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் இருவரையும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் மதுரை மத்தியச் சிறைக்கு கொண்டு சென்றனர்.