மலேசியாவில் வேலை வாங்கித்தருவதாக ஆன்லைனில் மோசடி: தந்தை மகன் கைது

மலேசியாவில் பவர் பிளாண்ட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ஆன்லைன் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, தரமணி, பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வள்ளி (வயது 55). இவரது மகன் முருகேசன் படித்து விட்டு அவருக்கு வேலை தேடி வந்தார். இந்நிலையில் மலேசியாவில் பவர் பிளாண்ட்டில் வேலை வாங்கி தருவதாக தொலைகாட்சி ஒன்றில் வந்த விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் தொடர்பு கொண்ட நபர் வள்ளியின் மகன் முருகேசனின் பாஸ்போர்ட் மற்றும் கல்விச் சான்றிதழ்கள் ஆகியவற்றை இமெயிலில் அனுப்பும்படியும், அவற்றை ஆய்வு செய்து விட்டு சொல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் வேலைய உறுதி செய்ய முன்பணமாக ரூ. 47 ஆயிரம் செலுத்தும்படி கூறியுள்ளார். அதன்படி வள்ளி 2 தவணைகளாக அவர் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பியுள்ளார். அதன் பிறகு அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்ற போது அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. தான் மோசடி செய்யப்பட்டது தெரியவந்ததும் வள்ளி அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமனிடம் புகார் அளித்தார்.

அதன்பேரில் அடையாறு காவல் மாவட்ட சைபர் கிரைம் தனிப்படை எஸ்ஐக்கள் ஜெயபாலாஜி, மகாராஜன் மற்றும் முதல் நிலை காவலர்கள் சதீஸ், இந்திராணி கொண்ட தனிப்படையினர் விசாரணை நடத்தினர். அந்த நபர்கள் பேசிய செல்போன் எண்கள் மற்றும் பணம் செலுத்திய வங்கி விபரங்கள் முதலியவற்றை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் கடலூர் பகுதியை சேர்ந்த மணிமாறன் (வயது 50), சிவா (எ) சிவானந்தம் (வயது 39) ஆகியோர் மோசடி செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனையடுத்து தனிப்படை போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின

இருவரும் கடந்த 2012ம் ஆண்டு முதல் மணிமாறனும், சிவாவும் கடலூரில் டிராவல்சும், வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை தேர்வு செய்து அனுப்பும் சங்கரதேவி கன்சல்ட்டன்சி என்ற பெயரில் வேலை வாய்ப்பு நிறுவனமும் நடத்தி வந்துள்ளனர். அதன் மூலம் சிலரை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் வெளியூரில் இருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் நபர்களிடம் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். பின்பு அவர்களிடம் கமிஷன் தொகை என்ற பெயரில் வங்கி கணக்கில் பணம் செலுத்துமாறு கூறி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் தரமணி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் விசாரணைக்குப் பின் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Translate »
error: Content is protected !!