இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது தன்னை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற இளைஞரைக் கத்தியால் குத்தி கொலை செய்த இளம்பெண்ணை விடுதலை செய்து திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அரவிந்தன் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஓரக்காடு ஊராட்சியிலுள்ள அல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் கடந்த 2ம் தேதி இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக அப்பகுதியிலுள்ள வயல்வெளிக்குச் சென்றார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்தவரும், உறவினருமான அஜித் குமார் (வயது 25) என்ற இளைஞர் அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்றார். அவரை கத்தியைக் காட்டி பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார். இதனை
சற்றும் எதிர்பாராத அந்த இளம்பெண், இளைஞரிடமிருந்து கத்தியைப்பிடுங்கி தற்காப்புக்காக அவரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அஜித்குமார் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். அது தொடர்பாக காவல் நிலையத்திற்கு நேரில் சென்று விவரத்தை சொல்லி சரணடைந்தார்.
இளம்பெண் அளித்த தகவலின்பேரில் சோழவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளைஞரின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இளம்பெண்ணிடம் நடத்திய விசாரணையில், ‘‘தற்காப்புக்காக மட்டுமே அவர் அஜித்குமாரை கத்தியால் குத்தியதும், அவருக்கு கொலை செய்யும் எண்ணம் இல்லை என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இளம்பெண் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302ன் கீழ் பதிவு செய்த போலீசார் கொலை வழக்கை, ஐபிசி பிரிவு 106 (தற்காத்துக் கொள்ள திரும்ப தாக்குதல்) என்ற பிரிவாக மாற்றினர்.
கடந்த 2012ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், மகளிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்த தனது கணவனை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலைசெய்த மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவரை, அப்போது மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்த அஸ்ரா கார்க், சட்டத்தில் வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் ஒரேநாளில் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது. அதற்கடுத்த சம்பவமாக எஸ்பி அரவிந்தன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது அவரை பாராட்ட வைத்துள்ளது.
இது குறித்து திருவள்ளூர் எஸ்பி அளித்துள்ள பேட்டியில் ‘‘அஜித்குமாரை கொலை செய்ய திட்டமிட்டோ, கொலைசெய்யும் நோக்கத்தோடு இளம்பெண் வீட்டிலிருந்து செல்லவில்லை. வெளியில் சென்றபோது, அவரை பாலியல் வன்புணர்வு செய்ய இளைஞர் முயன்றதால், தன்னைத் தற்காத்துக் கொள்ள அவரை கத்தியால் குத்தியுள்ளார். எனவே, அவர் மீது பதியப்பட்ட கொலை வழக்கைப் பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக கொலை செய்தால் குற்றமாகாது எனக் கூறும் இந்தியத் தண்டனைச் சட்டம் (ஐபிசி) 106ன் கீழ் மாற்றி பதிவு செய்துள்ளோம். மேலும், அவரை கைது நடவடிக்கையில் இருந்து விடுவிக்கிறோம். தொடர்ந்து அவர் கட்டுப்பாட்டில் இருக்கிறார்” என்றார்.