வாஷிங்டன்,
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் சதித்திட்டத்தின் பின்னால் உள்ள ராணுவத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
மியான்மர் பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி மியான்மர் ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தியுள்ளது. மேலும் நாட்டில் ஓராண்டிற்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் ஆலோசகர் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் மற்றும் ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சியின் முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மியான்மர் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், மியான்மரில் சதித்திட்டத்தின் பின்னால் உள்ள ராணுவத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். இதுகுறித்து வியாழக்கிழமை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசினார். மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டு அதிகாரத்தைக் கைப்பற்றிய மியான்மர் ராணுவம் தனது அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும்.
மியான்மரில் சதித்திட்டத்தின் பின்னால் உள்ள ராணுவத் தலைவர்கள் அமெரிக்காவில் ஒரு பில்லியன் டாலர் சொத்துக்களை கையாள்வதற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மேலும் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ள தலைவர்கள் மீது பல நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள பைடன்,
சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ள ராணுவத் தலைவர்களுக்கு பயனளிக்கும் அவர்களின் சொத்துக்கள் மற்றும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்களை உடனடியாக முடக்க தனது புதிய நிர்வாகத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளேன் என்றார்.
ராணுவம் கைப்பற்றிய அதிகாரத்தை கைவிட்டு மியான்மர் மக்களின் விருப்பத்திற்கு மரியாதை அளிக்க வேண்டும் எனவும் அதிபர் ஜோ பைடன் கூறினார். சூகி ஆதரவாளரும், செனட் மைனாரிட்டி தலைவருமான மிச் மெக்கோன்னெல், பிடனின் இந்த நடவடிக்கைகைய ஆதரித்துள்ளார்.
பர்மாவில் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்ட சரியான நேரத்தில் ஓர் நடவடிக்கை என்று அவர் கூறினார். பிடனின் இந்த அர்த்தமுள்ள நியாயமான நடவடிக்கையை உலக நாடுகள் ஆதரிக்கும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் நம்மோடு இணைவார்கள் என்றும் அவர் கூறினார்.