மீண்டும் வேல் யாத்திரை செல்ல முயற்சி: பாஜக தலைவர் எல். முருகன் உள்ளிட்டோர் மீது தொற்றுநோய் பரப்பியதாக வழக்கு

கோயம்பேட்டில் இருந்து மீண்டும் வேல் யாத்திரை செல்ல முயன்ற பாஜக தலைவர் எல். முருகன் உள்பட பாஜகவினர் மீது தொற்று நோயை பரப்பியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழக பாஜக தலைவர் எல். முருகன் சென்னை கோயம்பேட்டில்
இருந்து நேற்று கடந்த 5ம் தேதியன்று வேல் யாத்திரை சென்றார். அவரை பூந்தமல்லி, நசரத்பேட்டையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். திருத்தணிக்கு சாமி கும்பிடச்
செல்வதாக கூறியதால் எல். முருகனை மட்டும் செல்ல அனுமதித்தனர். மற்ற பாஜக வினர் கைது செய்யப்பட்டனர். அதனையடுத்து திருத்தணியில் இருந்து எல். முருகன் வேல் யாத்திரையை தொடங்கியதாக 500 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து வேல் யாத்திரைக்கான தமிழக அரசின் தடையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பாஜக வழக்கு தொடர்ந்தது. தமிழக அரசின் தடையை நீக்க மறுத்த கோர்ட் வழக்கின் விசாரணையை 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று காலை சென்னை கோயம்பேடு, கேம்ஸ் வில்லேஜில் இருந்து எல். முருகன் மீண்டும் தடையை
மீறி வேல் யாத்திரையை தொடங்கினார். முன்கூட்டியே அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் யாத்திரையை தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து எல்.முருகன் மற்றும் பாஜ மாநில துணைத் தலைவர் எம் என் ராஜா , தென்சென்னை மாவட்டத் தலைவர் சைதை சந்துரு உள்ளிட்ட பாஜகவினர் மீது போலீசார் தொற்று நோய் பரப்பியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!