சென்னை பெருநகரில் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாத 4,214 நபர்களிடம் இருந்து ரூ. 7.73 லட்சம் அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை நகர காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை நகரில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் தடையை மீறி வெளியிடங்களில் அத்தியாவசியமின்றி சுற்றும் நபர்கள், முககவசம் அணியாமல் வரும் நபர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னை நகரில் கடந்த 29.09.2020 முதல் 6.10.2020 வரை போலீசார் நடத்திய வாகன சோதனையில் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்த 4,113 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூ. 7 லட்சத்து 23 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத குற்றத்திற்காக 101 வழக்குகள் பதிவு செய்து ரூ.50,500 என மொத்தம் 4,214 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.7,73, 800 அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை நகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.