முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம் காலமானார்

கரூர்,

முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள வளையப்பட்டியைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான பாப்பாசுந்தரம் (86). இவர் கடந்த 7-ம் தேதி வீட்டு குளியலறையில் வழுக்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு கரோனா தொற்று உறுதியானது. அதன்பின் கொரோனா குணமான நிலையில் நுரையீரல் பாதிப்புக்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 5 நாள்களாக வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான வளையப்பட்டிக்கு மாலையில் கொண்டு வரப்பட்டது.

பாப்பாசுந்தரம் உடல் வளையப்பட்டியில் உள்ள அவரது வீட்டிலிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்படுகிறது. முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம் (86) கரூர் மாவட்டம் வளையப்பட்டியில் கடந்த 1934-ம் ஆண்டு செப். 30ம் தேதி பிறந்தவர். இவருக்கு மனைவி பாலாமணி, மகன்கள் கருணாகரன், கல்யாணகுமார், மகள் கலாவதி ஆகியோர் உள்ளனர். இதில் கருணாகரன் குளித்தலை கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளராக உள்ளார்.

பாப்பாசுந்தரம் கடந்த 1972-ம் ஆண்டு முதல் அதிமுக உறுப்பினர். 1989ம் ஆண்டு குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில அதிமுக ஜெயலலிதா அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று முதல் முறை எம்எல்ஏ ஆனார்.

1991-ம் ஆண்டு அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் மீண்டும் குளித்தலையில் போட்டியிட்டு 2-வது முறை எம்எல்ஏ ஆனார். 2001-ம் ஆண்டு குளித்தலை தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றிப்பெற்று மூன்றாவது முறையாக எம்எல்ஏ ஆனார்.

அப்போது 2002-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக இருந்தார். அதன்பின் கடந்த 2011-ம் ஆண்டு மீண்டும் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று நான்காவது முறை எம்எல்ஏ ஆனார். 2000-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை கரூர் மாவட்ட அதிமுக செயலாளராகவும், மாவட்ட அவைத் தலைவராகவும் பாப்பாசுந்தரம் இருந்துள்ளார்.

Translate »
error: Content is protected !!