சென்னை, சைதாப்பேட்டையில் மெடிக்கல் ஷாப்பை உடைத்து சுகர் மாத்திரைகளை திருடிய போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர். மாத்திரைகளை ஊசியில் செலுத்தி போதை ஏற்றியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.
சென்னை, சைதாப்பேட்டை விஎஸ் முதலி தெருவில் ஸ்ரீ வசந்தம் மெடிக்கல்ஸ் என்ற மருந்து கடை நடத்தி வருபவர் ரமேஷ் (வயது 47). கடந்த மாதம் 29ம் தேதி நள்ளிரவு கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் கல்லாவில் இருந்த பணம் மற்றும் மருந்து பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். அது தொடர்பாக ரமேஷ் சைதாப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் கடந்த ஜனவரி 14ம் தேதியன்று குமரன் நகர் காவல் நிலைய சரகத்தில் குமரன் காலனியில் உள்ள ஸ்ரீ பாலாஜி மெடிக்கல்ஸ், அதன் தொடர்ச்சியாக 15ம் தேதி சைதாப்பேட்டை பகுதியில் உள்ள குமரன் ஸ்டோரின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த 4000 ரூபாய் பணமும் திருடப்பட்டிருந்தது. மேலும் குமரன் நகர் பகுதியில் 19ம் தேதியன்று எத்திராஜ் நகரில் தொடர்ச்சியாக தனபால் தெருவிலும் கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு சுமார் 38 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டு இருந்தது. இது போன்ற தொடர்ச்சியான புகார்கள் தொடர்ந்து வந்ததையடுத்து சைதாப்பேட்டை உதவிக்கமிஷனர் அனந்தராமன் தலைமையில் தலைமைக்காவலர் புருசோத்தமன், முதல் நிலை காவலர்கள் செந்தில் குமார், காவலர்கள் பாண்டியராஜன், ஜோன் லுயிஸ் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தினர். அதனையடுத்து ஆதம்பாக்கம் அம்பேத்கர் பகுதியைச் சேர்ந்த பிங்கி (எ) அருண் குமார் (வயது 21) என்ற ஆசாமி இந்த தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில் பரபரப்பு தகவல்களை வெளியிட்டார்.
Tapentadol என்ற சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் மாத்திரைகளை பிங்கி போதை மருந்தாக பயன்படுத்தி வந்துள்ளார். 8 முதல் 10 மாத்திரைகளை நீருடன் கலந்து சிரஞ்சுகள் மூலம் உடலில் ஏற்றுவதால் சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் போதை ஏற்படும். அந்த போதைக்கு அவர் அடிமையாகியுள்ளார். இதனால் பூட்டிய மருந்து கடைகளை பார்த்து இரவில் நோட்டமிட்டு பூட்டை உடைத்து டேபன்டால் மாத்திரைகள் மற்றும் கல்லாவில் உள்ள பணத்தை திருடியதாக தெரிவித்துள்ளார். அவரிடம் இருந்து வேளச்சேரி பகுதிகளில் திருடிய Pulsar மற்றும் Duke ஆகிய இரண்டு இருசக்கர வாகனங்களையும் மற்றும் Red Mi செல்போனையும் கைப்பற்றினர். அவர் விசாரணைக்குப் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை நீதிமன்றக்காவலில் சிறையில் அடைத்தனர்.