வெப்பச்சலனம் காரணமாக மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய், புதன் ( மே 25,26) ஆகிய இரண்டு நாள்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது:
வெப்பச்சலனம் காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய், புதன் ஆகிய இரண்டு நாள்களுக்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேநேரத்தில் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையை பொருத்தவரை செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
மழை அளவு:
தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை, சிவலோகத்தில் தலா 50 மி.மீ., நீலகிரி மாவட்டம் மேல்பவானியில் 40 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் சின்னக்கல்லாா், குழித்துறையில் தலா 30 மி.மீ., தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல், நீலகிரி மாவட்டம் குன்னூரில் தலா 20 மி.மீ., சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டை, கோயம்புத்தூா் மாவட்டம் வால்பாறை, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் தலா 10 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவா்களுக்கு எச்சரிக்கை:
தமிழக கடலோரப் பகுதி, மன்னாா் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் மே 25-ஆம் தேதி முதல் மே 27-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் பலத்தக் காற்று வீசக்கூடும்.
இதுதவிர, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 25) மணிக்கு 65 கி.மீ. முதல் 75 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 85 கி.மீ. வேகத்திலும் பலத்தக்காற்று வீசக்கூடும்.
வடக்கு வங்கக் கடல், ஒடிஸா மற்றும் மேற்குவங்க கடலோரப் பகுதிகளில் மே 25, 26 ஆகிய தேதிகளில் மணிக்கு 50 கி.மீ. முதல் 100 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 110 கிலோ மீட்டா் வேகத்திலும் பலத்தக்காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.