வருசநாடு, வெள்ளி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது. தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
ஆண்டிபட்டி அருகே வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி, கடமலைக்குண்டு, கண்டமனூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் மூலவைகை யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் வைகை அணைக்கும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த வாரம் 58 அடியில் இருந்த அணையின் நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியது.
இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 69.03 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று 3 மாவட்ட மக்களுக்கு முதல் மற்றும் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 69 அடியை எட்டியுள்ளதால் இன்று 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.