தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் ரஜினியும், பிரம்மாண்ட இயக்குனரான மணிரத்னமும் பட வெளியீட்டில் மோத உள்ளார்களாம்.
‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குனர் மணிரத்னம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கி வருகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இரண்டு பாகங்களாக இப்படத்தை உருவாக்குகிறார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடைபட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் மீண்டும் தொடங்கியது.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் முதல் பாகத்துக்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாம். தற்போது வரை 70 சதவீத படப்பிடிப்பை முடித்துள்ளனர். மார்ச் 5-ந் தேதிக்குள் முதல் பாகத்துக்கான முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் என கூறப்படுகிறது.
அதேபோல் பின்னணி பணிகளை நான்கு, ஐந்து மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம். அவ்வாறு முடிக்கப்பட்டால் இப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினியின் அண்ணாத்த படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஜினியும் மணிரத்னமும் பட வெளியீட்டில் நேருக்கு நேர் களம் காண்பார்களா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.