சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 272 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். இதில் 136 படுக்கைகள் ஓரிரு நாட்களில் திறக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
சென்னையில் இன்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: அதிகரித்து வரும் கொரோனாவை தடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெறுகின்றன.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துமனையில் 7வது தளத்தில் 136 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் இது திறந்து வைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இதேபோன்று 8வது தளத்திலும் 136 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இது இன்னும் ஒரு வாரத்தில் திறக்கப்படும். முதலமைச்சரின் வழிகாட்டுதலில் கொரோனா பாதித்தவர்களுக்கு முழுமையாக சிகிச்சை அளிக்க அதிவேக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று அமைச்சர் சேகர்பாபு கொரோனா சிகிச்சை மற்றும் நோயாளிகளின் உடல்நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது தயாநிதி மாறன் எம்.பி. மற்றும் மருத்துவர்கள், அதிகாரிகள் உடன் இருந்தனர்.