தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலை படிப்படியாக வலுப்பெற்று புயலாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக உருவானது
இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி டிசம்பர் 2ம் தேதி தமிழக கடற்கரையை அடைகிறது. காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியப்பின் அதற்கு அடுத்த 48 மணி நேரத்திற்குள் புயலாக உருமாற வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக டிசம்பர் 1 மற்றும் 2ம் தேதி தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிக கனமழை முதல் அதீத கன மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் நாளை முதல் தமிழகத்தில் படிப்படியாக மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது புயலாக மாறினால் ”புரெவி” என பெயர் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.