சென்னை நகரில் அடிக்கடி நடக்கும் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கூடுதல் கமிஷனர்கள், இணைக்கமிஷனர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில் வடசென்னை இணைக்கமிஷனர் பாலகிருஷ்ணன், வண்ணாரப்பேட்டை துணைக்கமிஷனர் சுப்புலட்சுமி மேற்பார்வையில் போலீசார் அது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர்.
கடந்த 18ம் தேதியன்று சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலைய எல்லையில் பல்சர் பைக் ஒன்று காணாமல் போனது. அது தொடர்பாக வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன், தலைமைக் காவலர்கள் பரிமளா, கார்த்திகேயன், அசோக், ஷேக், பாலமுரளி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி கேமரா மூலம் பைக்கை திருடியது எண்ணுாரைச் சேர்ந்த அரபி என்கிற அரவிந்தன் (வயது 24), கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சாய்கிருஷ்ணன் என்கிற அப்பு என தெரியவந்தது. அதனையடுத்து அவர்களை 19ம் தேதி மாலை 7 மணியளவில் மூலக்கொத்தலம் பகுதியில் வைத்து கைது செய்து பல்சர் பைக்கை பறிமுதல் செய்தனர்.
விசாரைணயில் அவர்கள் டூ வீலர்களை திருடி வெளிமாநிலத்தில் விற்பதாக பரபரப்பு தகவல்களை வெளியிட்டனர். அரவிந்தன், அப்பு இருவர் மீதும் தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, முத்தையால்பேட்டை, திருவொற்றியூர், ஏழுகினறு, ஐஸ் ஹவுஸ், அண்ணா சதுக்கம், ராயபுரம் ஆகிய பகுதிகளில் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருக்கும் விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். திருடிய பின்னர் அவற்றை குறைந்த விலைக்கு ரூ. 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை விற்று விடுவார்கள். அதேபோல் சாய்கிருஷ்ணன் மூடிக்கிடக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளை திருடுவதில் கைதேர்ந்தவன். இவன் மீதும் திருட்டு வழக்குகள் மற்றும் செல்போன் பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருவரும் சேர்ந்து ஏராளமான வாகனங்களை திருடி வெளி மாவட்டங்களில் விற்று நல்ல பணம் சம்பாதித்ததாக போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
இருவரிடம் இருந்து ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 3 பைக்குகள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணைக்குப்பின்னர் இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.