சென்னை தி.நகரில் வயதான தம்பதிகளை கட்டிப்போட்டு 250 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
தி.நகர் சாரதாம்பாள் தெருவில் வசித்துவருபவர் நுாருல் ஹக் (71). கடந்த 30ம் தேதியன்று இவரையும் இவரது மனைவியையும் கட்டிப்போட்டு 250 சவரன் நகை மற்றும் காரை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் தினகரன், இணைக்கமிஷனர் பாபு, துணைக்கமிஷனர் ஹரிக்கிரன் பிரசாத் மேற்பார்வையில் பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் நுாருல் ஹக்கின் உறவினரான மொய்தீன் என்பவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து மொய்தீனின் செல் நம்பரின் கால் டீடெய்ல் விவரங்களை போலீசார் ஆய்வு செய்த போது இந்த கொள்ளையில் ஆலன், போரூரை சேர்ந்த விஜய், வண்டலூரை சேர்ந்த சுகுமார், செங்கல்பட்டை சேர்ந்த லோகேஷ், கூடுவாஞ்சேரியை சேர்ந்த மகேஷ், கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த தம்பிதுரை மற்றும் லோகேஷ்குமார், ஐஸ் அவுஸ் பகுதியை சேர்ந்த எல்லையப்பன் ஆகிய எட்டு பேரும் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
அவர்களை பிடித்து விசாரணை நடத்திய போது மொய்தீனுடன் சேர்ந்து கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர். நூருல் ஹக்கின் சகோதரர் ரூபிள் மொய்தீனிடம் வாங்கிய ரூ. 40 லட்சம் கடனை திரும்பத்தராததால் இந்த கொள்ளையை மொய்தீன் இந்த 8 பேரின் உதவியுடன் அரங்கேற்றியதாக கைதான 8 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். 8 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 3 பட்டாக்கத்திகள், 3 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
கொள்ளையடித்த நகை, பணத்தை பங்கு போட்டுக் கொள்ளலாம் என ஆசை வார்த்தை காட்டி 8 பேரையும் அழைத்து வந்த மொய்தீன் அத்தனை நகைகளையும் ஆட்டையைப் போட்டபடி தலைமறைவாகி விட்டார். மொய்தீனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.