சென்னை செம்பியத்தில் வாக்கிங் சென்ற வயதான பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, பெரம்பூர், பேரக்ஸ் ரோட்டைச் சேர்ந்தவர் சுபாஷினி (வயது 54). கடந்த 30ம் தேதியன்று காலை பெரம்பூர், சுப்ரமணி தெரு வழியாக நடை பயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த 3 நபர்கள் சுபாஷினியின் கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர்.
இதுகுறித்து சுபாஷினி செம்பியம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் செம்பியம் போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் தீவிர ஆய்வு செய்தனர். அதில் பதிவான கொள்ளையர்களின் அங்க அடையாளங்கள் மற்றும் அவர்கள் தப்பிச்சென்ற வாகனப் பதிவெண் மூலம் கொள்ளையர்களை போலீசார் அடையாளம் கண்டனர்.
அதனையடுத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட புளியந்தோப்பைச் சேர்ந்த அஜித்குமார் (எ) ஸ்பீடு அஜித் (19), வியாசர்பாடி ஆகாஷ் (எ) இன்பகுமார் (வயது 19), ராஜேஷ் (எ) மாட்டு ரவி (20) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுபாஷினியின் 7 சவரன் தங்கச்சங்கிலி உட்பட 10. 5 சவரன் தங்க நகைகளை போலீசார் மீட்டனர். மேலும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் வழிப்பறி மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு அதன் மூலம் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.