விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் யூசுப் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
அவரின் மரணம் தாங்க முடியாத பேரிழப்பு என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம் எச் ஜவாஹிருல்லா வெளிட்ட அறிக்கை,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முஹம்மது யூசுப் அவர்கள் மரணித்த செய்தி தாங்க முடியாத துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட காலம் சமுதாய சேவைகளில் ஈடுபட்ட வந்த சகோதரர் யூசுப் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து அவரது அயராத உழைப்பு உத்வேகம் முதலிய சீரிய பண்புகளினால் அக்கட்சியின் பொருளாளராக ஏற்றம் பெற்று சிறப்பான முறையில் பணியாற்றினார்.
முஸ்லிம் சமுதாயத்திற்கும் தலித் சமூகத்திற்குமிடையே ஒரு பாலமாக அவர் செயல்பட்டார். அறிவார்ந்த முறையில் ஒரு பன்முக சமூகத்தில் செயல்பட வேண்டும் என்ற நாட்டம் கொண்டு அந்த அடிப்படையில் செயல்பட்டு வந்தவர்.
என்னுடன் மிக நெருக்கமான நட்புறவு கொண்டிருந்தார். பல நெருக்கடியான நேரங்களில் தனிப்பட்ட முறையில் என்னிடம் ஆலோசித்து முடிவுகளை எடுப்பார். எனக்கும் பல சந்தர்ப்பங்களில் நல்ல ஆலோசனைகளைத் தந்தவர்.
கடந்த ஏப்ரல் 25 அன்று அவரது டிவிட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள தனக்குப் புத்தகங்கள் தான் நண்பர்கள் என்று பதிவு ஒன்றைச் செய்திருந்தார். உடனடியாக நான் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தேன். தொற்று சிறிய அளவில் தான் உள்ளது என்றும் மருத்துவமனையில் சேரும் அளவிற்கு அது தீவிரமாக இல்லை என்றும் தெரிவித்தார்.
ஆனால் அது தீவிரம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மரணத்தைத் தழுவும் நிலைக்குக் கொண்டு சென்று விட்டது. சகோதரர் யூசுப் அவர்களின் மரணம் எனது குடும்ப உறுப்பினர் ஒருவரை இழந்து விட்ட துயரத்தை எனக்கு ஏற்படுத்தியுள்ளது. சமூகத்திற்கும் அது பெரும் இழப்பாக அமைந்துள்ளது. ஒரு ஆற்றல்மிக்க களப்போராளியை நாம் இழந்துள்ளோம். அவரை இழந்து வாடும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என அவர் பதிவிட்டார்.