திருப்பூர் அருகே, விசைத்தறியாளரை கடத்திச் சென்று பணம், நகை பறித்த பெண் உட்பட 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை சேர்ந்தவர் நாட்ராயன், 56. இவர் அதே பகுதியில் விசைத்தறி வைத்து போர்வை உற்பத்தி செய்து வருகிறார். இவரது செல்போனை தொடர்பு கொண்ட பெண் ஒருவர், தங்களுக்கு போர்வை அதிகளவில் தேவைப்படுவதாகக்கூறியுள்ளார்.
அத்துடன், ஆண்டிபாளையம் என்ற இடத்திற்கு வந்து ஆர்டர் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு, நட்ராயனிடம் அந்த பெண் கூறியுள்ளார். இதை நம்பிச் சென்ற நாட்ராயன் மற்றும் அவருடன் சென்றவரை, அங்கு ஏற்கெனவே பதுங்கி இருந்த கும்பல் மடக்கிப் பிடித்து, அவர்களின் ஆடைகளை களைந்துள்ளனர்.
மேலும் அந்தக்கும்பலில் இருந்த பெண்ணோடு நிற்கவைத்து புகைப்படங்களையும் எடுத்துள்ளனர். அதை வைத்து மிரட்டிய அந்த கும்பல் ரூ. 3 லட்சம் பணம் வேண்டுமென கேட்டுள்ளனர். மேலும் நாட்ராயன் அணிந்திருந்த ஒன்றரை பவுன் நகை, அவருடைய செல்போன், கையில் இருந்த ரூ.3 ஆயிரம் ரொக்கத்தையும் பறித்துக் கொண்டு அனுப்பினர்.
அத்துடன் நாட்ராயன் செல்போனுக்கு அழைத்த மோசடி கும்பல் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக, காவல் நிலையத்தில் நாட்ராயன் புகார் அளித்தார்.
அதன்பேரில், விசாரணை நடத்திய போலீசார் அவிநாசியை சேர்ந்த கவிதா (எ) வெண்ணிலா (27), தூத்துக்குடியை சேர்ந்த இசக்கிபாண்டி (30), திருநெல்வேலியை சேர்ந்த இசக்கிமுத்து (27), ஜெபராஜ் (24), சின்னதுரை (29) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை, பணம், கார், அரிவாள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.