வியாபாரியின் கவனத்தை திசை திருப்பி பணத்துடன் எஸ்கேப் ஆன கில்லாடி ஆசாமியை சென்னை அபிராமபுரம் சிசிடிவி கேமரா மூலம் துப்பறிந்து கைது செய்தனர்.
சென்னை, ராயப்பேட்டை, பொன்னுசாமி தெருவைச் சேர்ந்தவர் வில்சன் (56). கடைகளுக்கு பிஸ்கட் சப்ளை செய்து வருகிறார். கடந்த 17ம் தேதியன்று மதியம் 1.30 மணியளவில் அபிராமபுரம் புனிதமேரி சாலையில், குவாலிட்டி ஓட்டல் அருகே கடைகளுக்கு பிஸ்கட் சப்ளை செய்து விட்டு நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த டிப்டாப் ஆசாமி ஒருவர் வில்சனிடம் 2 ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை வேண்டும் என கேட்டுள்ளார். வில்சன் சில்லறையாக ரூ. 2 ஆயிரத்தை கொடுத்துள்ளார். சில்லறையை வாங்கிய நபர் அவருக்கு ரூ. 2 ஆயிரம் பணத்தை கொடுக்காமல் வில்சனின் கவனத்தை திசை திருப்பிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். அதிர்ச்சியடைந்த வில்சன் இது குறித்து அபிராமபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிகளை வைத்து வில்சனிடம் கைவரிசை காட்டிய செம்மஞ்சேரியைச் சேர்ந்த ரமேஷ் (56) என்பவரை கைது செய்தனர்.
ரமேஷ் சென்னையில் பல்வேறு பகுதிகளில் கடைக்காரர்களிடம் 2000- ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொண்டு சில்லறை வாங்குவது போல் நடித்து அவர்களிடம் பணத்தினை அபேஸ் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். டிப்டாப் உடை அணிந்து வரும் அவர் வங்கி ஊழியர் போல பலரிடம் நடித்துள்ளார். மேலும் வங்கிகளின் வாசல்கள், மின் கட்டணம் செலுத்தும் இடங்களில் மதிய உணவு இடைவேளை சமயங்களில் நிற்கும் இவர் அங்கு பணம் செலுத்த வரும் பொதுமக்களிடம் அலுவலக நேரம் முடிந்துவிட்டதாக வாடிக்கையாளர்களை வெளியே நிற்க சொல்வார். பின்னர் அவர்களிடம் பணத்தினை பெற்று சலானை நிரப்பி கவுண்டரில் பணம் கட்டித்தருவதாக கூறி பணத்துடன் தப்பியோடி விடுவார் போன்ற அதிர்ச்சித்கவல்கள் வெளியாகின. அபிராமபுரம் மட்டுமின்றி இவர் மீது சென்னை அண்ணாசாலை, டிபி சத்திரம் உள்ளிட்ட காவல்நிலையங்களில் இது போன்ற கவனத்தை திசை திருப்பி கொள்ளையடித்ததாக வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். விசாரணைக்குப்பின்னர் ரமேஷ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.