விலையுயர்ந்த சொகுசு கார்களை கார்களை அடித்து நொறுக்கிய ரவுடி கும்பல் 5 பேர் கைது

விலையுயர்ந்த ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ சொகுசு கார்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய ரவுடி கும்பலைச் சேர்ந்த 5 பேரை போலீசார் சிசிடிவி கேமரா மூலம் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

சென்னை, கொட்டிவாக்கம், லட்சுமணபெருமாள் நகர் 5து குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சஞ்சீவ் குமார் (வயது 33). அடையாறு ஆவின் பூங்கா அருகில் தனது பார்ட்னர் பாலமுருகன் என்பவருடன் இணைந்து கார் ஷோரூம் நடத்தி வருகிறார். மேலும் கடந்த 2016ம் ஆண்டு முதல் பாலவாக்கத்தில் மேலும் ஒரு கார் ஷோரூமை பாலமுருகன் மற்றும் சபரிகிரிநாதன் என்பவருடன் சஞ்சீவ் குமார் சேர்ந்து நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் சபரிகிரிநாதன், சஞ்சீவ்குமார் மற்றும் பாலமுருகனிடம் கடனாக ஒன்னரை கோடி ரூபாய் கடனாக வாங்கியதாக தெரிகிறது. அந்த பணத்தை திரும்பத் தராமல் சபரிகிரிநாதன் காலம் தாழ்த்தி வந்தது மட்டுமின்றி இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில் இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பாக சபரிகிரிநாதன் மற்றும் பாலமுருகன், சஞ்சீவ்குமார் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 18ம் தேதியன்று சஞ்சீவ்குமாரின் கார் ஷோரூமுக்கு அடியாட்களை அனுப்பி அங்குநிறுத்தப்பட்டுள்ள கார்களை அடித்து நொறுக்கப்போவதாக சபரிகிரிநாதனின் கூட்டாளி வசந்த் என்பவர் மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வசந்த் சொல்லியது போல 18ம் தேதியன்று இரவு 9 மணியளவில் தலையில் ஹெல்மெட் மற்றும் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி வந்த கும்பல் சஞ்சீவ்குமாரின் கார் ஷோரூமுக்குள் நுழைந்தனர்.

அங்கு நிறுத்தப்பட்டிருந்த ரூ. 1 கோடி மதிப்புள்ள ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ, வால்வோ கார்களை இரும்புக்கம்பியால் அடித்து நொறுக்கி விட்டு தப்பியோடி விட்டனர். அது தொடர்பாக சஞ்சீவ்குமார் சென்னை சாஸ்திரி நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர்கள் கார்களை அடித்து நொறுக்குவது பதிவாகியிருந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவான்மியூரைச் சேர்ந்த நித்யானந்தன் (22), சூர்யா (19), மணிகண்டன் (27), டேவிட் (18) பிரேம் (20) ஆகிய 5 பேரை கைது செய்தனர். சபரிகிரிநாதன், வசந்த் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!