வேண்டும்… வேண்டாம்..! அமித்ஷாவை யோசிக்கவைத்த எடப்பாடி, ஓபிஎஸ்..!

தமிழகத்தில் ஏப்ரல் 6 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பிரச்சாரங்களை ஒதுக்கிவைத்துவிட்டு கூட்டணியை இறுதி செய்யும் முனைப்பில் களமிறங்கிய எடப்பாடி, பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கி பாமகவின் கூட்டணியை உறுதிசெய்துள்ளார்.

அதுபோலவே, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில், பாஜக மாநிலத் தலைமையின் செல்வாக்கு எடுபடாததால், தமிழகம் வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவே நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக பாஜகவினர் சிலர் கூறுகின்றனர்.

பேச்சுவார்த்தையின் போது, 22 அல்லது 23 தொகுதிக்கு மேல் நீங்கள் கேட்காதீர்கள். தமிழகத்தைப் பொறுத்தவரையில் பாஜகவிற்கு இந்தத் தொகுதிகளே போதுமானது. குறைந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பை அதிகமாகப் பெறுங்கள் என அதிமுக தரப்பில் கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு இறங்கிவராத அமித்ஷா, 30 தொகுதிகள் வேண்டும் எனக் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்தப் பேச்சுவார்த்தைக்கு நடுவில், அதிமுகவுடன் சசிகலாவையும் (சசி+தினகரன்) இணைத்துக் கொள்ளுங்கள் என அமித்ஷா அட்வைஸ் செய்ய, எடப்பாடியின் முகம் இறுகிப் போயுள்ளது. மேலும் தொடர்ந்த அமித்ஷா, அதிமுகவின் வாக்குகளை சசிகலா சிதறடித்துவிடக் கூடாது.

அதனால்தான், இந்த இணைப்பு அவசியமான ஒன்றாக இருக்கிறது எனக் கண்டிப்பான குரலில் சொல்லியுள்ளார். அமித்ஷாவுக்கு, அதிமுக ஒன்றிணைய வேண்டும் அல்லது திமுக தோற்க வேண்டும் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.

எப்படியாவது சட்டமன்றத்தில் பாஜக எம்.எல்..க்கள் நுழைந்துவிட வேண்டும் என்பதுதான் அவரின் பிரதான இலக்கு என்கின்றனர் பெயர் சொல்ல விரும்பாத பாஜகவினர். மேலும், இந்தப் பேச்சுவார்த்தையில் எடப்பாடி பழனிசாமி, சசிகலா இணைப்பிற்கு உறுதியாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ஆனால், ஓபிஎஸ்ஸோ சசிகலா இணைப்புக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார்.

இப்படி, சசிகலாவை இணைத்துக் கொள்ள வேண்டும் என ஒருவரும், வேண்டாம் என இன்னொருவரும் சொல்லிவருவதால் அமித்ஷா யோசனையில் ஆழ்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதேசமயம், அதிமுகவின் மற்றொரு தரப்பினர், சசிகலாவை பாஜக சீண்டவே இல்லை. அதுதான் சசிகலாவின் மவுனத்திற்குக் காரணம் எனச் சொல்கின்றனர். எது எப்படியோ, தேர்தல் தேதி நெருங்க இருப்பதால், விரைவில் இதற்கான முடிவுகளும் மர்ம முடிச்சுகளும் அவிழும் என எதிர்பார்க்கலாம்

Translate »
error: Content is protected !!