ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க தொடர்ந்திருந்த வழக்கு.. இன்று மீண்டும் விசாரணை

ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க அனுமதி கோரி ஆலை நிர்வாகம் தொடர்ந்திருந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

கொரோனா பரவலின் இரண்டாம் அலை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் சுமார் 3.50 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் இல்லாமல் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் நிலையும் நாட்டில் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மத்திய அரசு ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் தினசரி 500 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும் என்பதால் ஆலையை இயக்க அனுமதி கோரி ஆலை நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கு தொடரப்பட்டது .

நாட்டில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால், ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழக அரசே இயக்கி ஏன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக் கூடாது என நீதிமன்றம் கேள்வி எழுப்பிருந்தது. இருப்பினும், இதற்கு நிர்வாகம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது, ஆலையை இயக்கும் நிபுணத்துவம் தங்களிடம் மட்டும் தான் உள்ளதாக தெரிவித்தது.

இந்நிலையில், இது குறித்து ஆலோசிக்க நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆக்சிஜன் தேவைக்காக தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் எனத் தெரிவித்தனர். அதில் பேசிய முதல்வர் பழனிசாமி, ஆலையை திறப்பது அரசின் நோக்கம் இல்லை என்றும் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் அலையை 4 மாதங்கள் மட்டும் இயக்க அனுமதிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பான தீர்மானமும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் தொடர்ந்துள்ள வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை, இன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ளது. இருப்பினும், ஸ்டெர்லைடை மீண்டும் திறக்க ஆலையை சுற்றியுள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!