ஸ்டெர்லைட் ஆலை.. வேதாந்தா நிறுவனத்தின் மிக பெரிய சதி – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

வேதாந்தா நிறுவனத்திற்கு ஆதரவான நாடக நடவடிக்கை என எஸ்.டி.பி.கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கொரோனா 2வது அலை பரவலால் வடமாநிலங்களில் நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சமாளிக்க, மக்கள் போராட்டத்தால் மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை நிறுவனத்தின் மூலம் 4 மாதங்களுக்கு ஆக்ஸிஜனை தயாரித்துக் கொள்ளலாம் என்று அனைத்துக் கட்சி கூட்டம் என்ற பெயரில் தமிழக அரசு இன்று கூட்டிய அரசியல் கட்சிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மக்களின் கோரிக்கைக்கு முற்றிலும் எதிரான இத்தகைய முடிவு கண்டனத்திற்குரியது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை அதிகமாக உள்ளது என்பதும், அதனால் வடமாநிலங்களில்  மக்கள் மரணமடைகிறார்கள் என்பதும் உண்மைதான். இந்த அவலத்திற்கு மத்திய, மாநில அரசுகளின் போதிய திட்டமிடல் இல்லாத அலட்சியப் போக்கே காரணம் என்பதை மறுக்க முடியாது.

ஆனால், தற்போது நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு ஸ்டெர்லைட் ஆலை மூலமே தீர்வு கிடைக்கும் என்பது போன்ற மாயை திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை எந்த வகையிலாவது திறக்க வேதாந்தா நிறுவனம் மேற்கொண்ட சதிவலையில் தமிழக அரசும், இன்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சிகளும் சிக்கியுள்ளன.

உயிரைக் காக்கும் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய, தூத்துக்குடியில் சுற்றுச்சூழலை நாசம் செய்த அனில் அகர்வாலின் மக்கள் விரோத ஸ்டெர்லைட் ஆலையை தவிர வேறு வழில்லை என்பது உச்ச நீதிமன்றம் வழியாக வேதாந்த நிறுவனம் மேற்கொண்ட நாடகமே என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

ஸ்டெர்லைட் ஆலை மூலம் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதிக்க வேண்டும் என்பது கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, சிகிச்சையளிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கை அல்ல. மாறாக தனது லாப வெறிக்காக காற்றை நச்சாக்கிய ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கோரிக்கை. நாடு முழுவதும் எழும் மரண ஓலத்தின் மூலம் தனது மனிதாபிமான சேவை என்ற சதிவலையின் மூலம் ஆலையை எப்படியேனும் திறக்க அந்நிறுவனம் மேற்கொண்ட நாடகமாகும்.

இந்த கோரிக்கைக்காக ஸ்டெர்லைட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாடவில்லையெனில் இந்த அரசு இதுவல்லாத வேறு நடவடிக்கைகளில் தான் நிச்சயம் கவனம் செலுத்தியிருக்கும் என்பதை அரசியல் கட்சிகள் புரிந்துகொள்ளாததேனோ? ஸ்டெர்லைட்டில் 1050 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டாலும் அவை தொழில் சார்ந்த ஆக்சிஜன் ஆகும்; இதை மருத்துவத்திற்கு பயன்படுத்த முடியாது. வெறும் 35 டன் மட்டுமே மருத்துவத்துக்கு பயன்படுத்த முடியும்.

வேதாந்தா நிறுவனத்திடம் வாயுவாக உள்ள ஆக்சிஜனை திரவ ஆக்சிஜனாக மாற்றும் உட்கட்டமைப்பு இல்லை; அந்த கட்டமைப்புகளை உருவாக்க 9 மாத காலம் ஆகும் என்று தமிழக அரசு வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் இன்று விளக்கம் அளித்துள்ளார். இதுபோன்ற விசயங்கள் விவாதிக்கப்பட்டுதான் தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் இத்தகைய முடிவெடுக்கப்பட்டாதா என்ற கேள்வி எழுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் நாடு முழுவதும் 550 இடங்களில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க பி.எம்.கேரிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின. அனைத்து தொழிற்சாலைகளும் தொழில் சார்ந்த ஆக்ஸிஜன் உற்பத்தியை மாற்றி மருத்துவ பணிக்கான ஆக்ஸிஜன் தயாரிக்க அறிவுறுத்தப்பட்ட செய்திகள் வெளியாயின.

இப்படி போர்க்கால நடவடிக்கைகள் ஒருபுறம் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில், பயன்பாட்டில் இல்லாத ஆலையை செப்பனிட்டே ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியும், அதுவும் தங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டால் மட்டுமே முடியும் என்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ள வேதாந்தா நிறுவனத்தின் சதி கோரிக்கையை தீவிரமாகப் பரிசீலிக்காமல், வேதாந்தாவுக்குத் துணைபோவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

சட்டத்திற்குப் புறம்பாக நச்சு வாயுக்களை வெளியிட்டு சுற்றுச்சூழல் அனைத்தையும் விஷமாக்கி, அதற்கெதிராக போராடிய 16 உயிர்களை காவு வாங்கி  கிரிமினல் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய கருப்பு நிறுவனமான ஸ்டெர்லைட், இன்று ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக சுத்தமான காற்றை உற்பத்தி செய்து தருவதாக நீலிக்கண்ணீர் வடிக்கிறது.

நல்லெண்ணம் என்ற பெயரில் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து, மறைமுகமாக ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணியை செய்து ஆலையை மீண்டும் இயக்கத் துடிக்கும் வேதாந்தாவின் மறைமுக சதித்திட்டத்திற்கு ஒருபோதும் ஆளும் அரசும், அரசியல் கட்சிகளும் துணை போய்விடக் கூடாது. தற்போது இந்தியாவிற்கு தேவையான மருத்துவ ஆக்சிஜன் சுமார் 6 ஆயிரம் மெட்ரிக் டன் என கூறிவருகிறது. இங்கு தினசரி உற்பத்தி 7000 மெட்ரிக்  டன் என அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

எனினும் இங்கு பிரச்சினை என்பது ஆக்சிஜனை கொண்டு செல்வதற்கான சிலிண்டர் பற்றாக்குறை, போக்குவரத்து வசதி இல்லாதது, திரவ ஆக்சிஜனை குறிப்பிட்ட வெப்பநிலைக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்பதால் அருகாமைக்குள்தான் கொண்டு செல்ல முடியும் என்பது தானே தவிர உற்பத்தியில் அல்ல.

இதற்கான வாய்ப்புகளை கடந்த ஆண்டு நிகழ்ந்த கொரோனா முதல் அலை காலத்தில் மோடி தலைமையிலான பாஜக  அரசு ஏற்படுத்தாமல் இருந்து விட்டு, இன்று ஆக்ஜிசன் பற்றாக்குறை என்ற காரணத்தைச் சொல்லி ஸ்டெர்லைட் ஆலையை மறைமுகமாக திறக்க துணை போகிறது. ஆகவே தூத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, காற்றை நச்சாக்கிய ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு துணை போகும் முடிவை கைவிட்டு. வேறு வழிகளில் ஆக்ஸிஜன் உற்பத்தியை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு வாதத்திற்கு, பல்வேறு மாற்று வழிகளின் மூலம் அல்லாது ஸ்டெர்லைட் மூலமாகத்தான் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என்கிற வாதம் நீதிமன்றம் வழியாக வருமானால், உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் அரசு வசம் ஒப்படைக்கக் கூடாது என்று தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திர வாதத்தை முறியடித்து, அரசே ஆக்ஸிஜன் உற்பத்தியை  மேற்கொள்ள வேண்டுமே தவிர ஒருபோதும் நாசகார ஸ்டெர்லைட் வசம் ஒப்படைத்து விடக்கூடாது.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!