பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் தற்போது ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தமிழில் தாம்தூம் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் தற்போது ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தில் நடித்து முடித்துள்ளார். அடிக்கடி சர்ச்சை கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறார். இந்தி நடிகர்களுக்கு போதை பொருள் பழக்கம் இருப்பதாக குற்றம் சாட்டினார். மராட்டிய அரசையும் கண்டித்தார். இதனால் மும்பையில் உள்ள அவரது அலுவலகம் இடிக்கப்பட்டது.
இந்த நிலையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தையும் தற்போது விமர்சித்துள்ளார். இதனால் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. “சமூக வலைத்தளத்தில் எனக்கு கற்பழிப்பு மிரட்டல்கள் வருகிறது” என்று கங்கனா ரணாவத் குற்றம் சாட்டி உள்ளார். அவர் மேலும் கூறும்போது, “சினிமா துறையில் நான் நேர்மையாக இருந்து இருக்கிறேன். அந்த துறையில் உள்ள பலருக்கு என்னை பிடிக்கவில்லை. மணிகர்ணிகா படம் வெளியானபோது கர்னி சேனாவுடன் மோதியதால் அந்த அமைப்புக்கும் என்னை பிடிக்கவில்லை. நான் ஓட்டுகளை சிதறடிப்பதால் எந்த அரசியல் கட்சியும் என்னை விரும்பவில்லை என்கின்றனர். என் மனசாட்சிப்படி வாழ்கிறேன்” என்றார்.