நாடு முழுவதும் நகரங்களில் குடிநீரின் தரம் தொடர்பாக மத்திய அரசு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அதன்படி முதல்கட்டமாக 10 நகரங்களில் ஆய்வு நடத்துகிறார்கள்.
அனைத்து நகரங்களிலும் தரமான குடிநீரை மக்களுக்கு வழங்க மத்திய வீட்டுவசதி மற்றும் நகர மேம்பாட்டுத்துறை திட்டங்களை வகுத்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் நகரங்களில் குடிநீரின் தரம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அதன்படி முதல்கட்டமாக ஆக்ரா, பட்லாபூர், புவனேஸ்வரம், ஜுரு, கொச்சி, மதுரை, பாட்டியாலா, ரோக்தக், சூரத், தும்கூர் ஆகிய 10 நகரங்களில் ஆய்வு நடத்துகிறார்கள்.
தண்ணீரின் தன்மை எவ்வாறு இருக்கிறது? ஆரோக்கியமாக உள்ளதா? என்பது தொடர்பாக விரிவாக ஆய்வு செய்கின்றனர். மக்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் ஆய்வகத்திற்கு கொண்டு சென்று சோதனை நடத்தப்படும். மேலும் நகரங்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரி, கிணறுகள் உள்ளிட்ட நீர் ஆதார மையங்களுக்கு சென்று அவற்றின் நிலை குறித்தும் ஆய்வு செய்கின்றனர்.
இத்துடன் பொதுமக்கள், நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து உரிய தகவல்களை பெறுகிறார்கள். அதில் குறைபாடுகள் இருந்தால் அதனை களையும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாட்டில் உள்ள 4,378 நகரங்களில் இருந்து சுத்தமான குடிநீர் அனைத்து ஊர்களுக்கும் வழங்குவதற்கு ரூ.2 லட்சத்து 87 ஆயிரம் கோடியில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதன் ஒரு அங்கமாக இந்த ஆய்வு நடக்கிறது.