வருகிற 16-ந்தேதி காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. புத்தாண்டு அன்று மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.
மெரினா கடற்கரையில் அதிக கூட்டம் கூடும் என்பதாலும், அதன் மூலம் கொரோனா பரவல் அதிகரித்துவிடும் என்பதாலும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் வருகிற 16-ந்தேதி காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் காணும்பொங்கல் அன்று மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கூடுவார்கள்.
அவர்கள் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வருவார்கள். புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் மாட்டு வண்டிகளிலும் மெரினா கடற்கரைக்கு வருவார்கள். அப்போது அதிக அளவில் கூட்டம் இருக்கும் என்பதால் மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்தை நிறுத்தியும், காணும் பொங்கலை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்படும்.
குடும்பத்தினருடன் வரும் சிறுவர்கள் கால்பந்து, கபடி உள்ளிட்ட விளையாட்டுகளிலும் ஈடுபட்டு மகிழ்வார்கள். இந்த ஆண்டு புத்தாண்டுக்கு மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டது போன்று காணும் பொங்கல் அன்று வருகிற 16-ந்தேதியும் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
போலீசாரும், காணும் பொங்கல் அன்று பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட உள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர் தினகரன், திருவல் லிக்கேணி துணை கமிஷனர் கிருஷ்ணராஜ் ஆகியோர் காணும் பொங்கல் அன்று என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பது தொடர்பாக விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர்.
இந்த கூட்டத்தில் காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வராத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது, மெரினா கடற்கரைக்குள் வாகனங்களில் செல்ல முடியாதபடி சர்வீஸ் சாலை முழுவதும் தடுப்பு வேலி அமைப்பது உள்ளிட்டவை பற்றி முடிவு எடுக்கப்படுகிறது. புத்தாண்டு போலவே காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரை சீல் வைக்கப்படுகிறது.
கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகிறது. இந்த பணிகள் எல்லாம் 15-ந்தேதி நள்ளிரவிலேயே முடிந்துவிடும். காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரையில் மட்டும் சுமார் 2 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அண்ணா சதுக்கம் மற்றும் மெரினா காவல் நிலைய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார் கள்.
ஆனால் அதேநேரத்தில் பொங்கல் திருநாளான 14-ந்தேதி, மாட்டுப்பொங்கல் தினமான 15-ந்தேதி, காணும் பொங்கலுக்கு மறுநாளான ஞாயிற்றுக்கிழமை (17-ந்தேதி) ஆகிய 3 நாட்களிலும் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இரவு 10 மணி வரை மட்டுமே பொதுமக்கள் மெரினா கடற்கரையில் இருக்க அனுமதிக்கப்படுவார்கள்.
மெரினா கடற்கரைக்கு வருபவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். தற்போது முககவசம் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த 3 நாட்களிலும் மெரினா கடற்கரையில் கூடுதலாக மாநகராட்சி ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் பெசன்ட்நகர், திருவான்மியூர், நீலாங்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரை பகுதிகளிலும் காணும் பொங்கல் அன்று பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. அங்கு பொதுமக்கள் வருவதை தடுக்கும் நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘காணும் பொங்கல் அன்று பொதுமக்களுக்கு கடற்கரை பகுதிகளில் அனுமதி இல்லை. எனவே அன்று பொதுமக்கள் யாரும் கடற்கரை பகுதிகளுக்கு வரவேண்டாம். பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்களும் பொதுமக்கள் கடற்கரை பகுதிகளில் இரவு 10 மணிவரை அனுமதிக்கப்படுவார்கள்.