கோவையில் திமுக பிரமுகர் வீடு மற்றும் சென்னை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 22 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை மாநகர் திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்து வருபவர் பையா கவுண்டர் என்னும் ஆர். கிருஷ்ணன். இவர் கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில், கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக எம்எல்ஏ ஆறுக்குட்டியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.
கோவை மாவட்ட திமுகவில் முக்கிய நபராக இருந்து வரும் இவரது வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக இச்சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல், ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்ட கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் 22 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரே நேரத்தில் தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது, தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.