சென்னையில் உள்ள 19 காவலர் குடும்பங்களுக்கு மருத்துவம் மற்றும் கல்வி உதவித்தொகையாக ரூ. 34.68 லட்சம் நிதி உதவியை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வழங்கினார்.
சென்னை நகர காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் உயர்மருத்துவ சிகிச்சை அல்லது மருத்துவ சிகிச்சை பெற்றால் அவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு செலவழித்த தொகை தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து அளிக்கப்பட்டு வருகிறது. அதன் பேரில், சமீபத்தில் மருத்துவ சிகிச்சை பெற்று, நிதியுதவிக்கு விண்ணப்பித்திருந்த 19 காவல் ஆளிநர்களுக்கு அவற்றை வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் தலைமையில் நடந்த இவ்விழாவில் காவல் ஆளிநர்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 28 லட்சத்து 69 ஆயிரத்து 42 மதிப்புள்ள காசோலைகளை வழங்கினார்.
மேலும் பணியின்போது இறந்த காவல் ஆளிநர்களின் வாரிசுகளுக்கும், கல்வி உதவித்தொகை வழங்க கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஏற்பாடு செய்துள்ளார். அதன்பேரில் பணியின்போது இறந்த 42 காவல் ஆளிநர்களின் கல்வி பயிலும் வாரிசுகளுக்கு கல்லூரி மற்றும் பள்ளி படிப்புக்கான கல்வி உதவி தொகையினை, அவரது குடும்பத்தினரிடம் கமிஷனர் வழங்கினார். கல்லூரி கல்வி உதவி தொகை தலா ரூ. 20 ஆயிரம்- மற்றும் பள்ளி கல்வி உதவித்தொகை தலா ரூ. 12 ஆயிரம் என மொத்தம் ரூ. 5 லட்சத்து 99 ஆயிரத்து 700 வழங்கப்பட்டது. இந்த வகையில் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் காவல் ஆளிநர்களின் குடும்பத்துக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவித்தொகையாக ரூ. 34 லட்சத்து 68 ஆயிரத்து 742- ஆகும். இந்த நிகழ்ச்சியில் சென்னை நகர போலீஸ் கூடுதல் கமிஷனர்கள் அமல்ராஜ், தினகரன், அருண், கண்ணன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.