சென்னையில் 3 இடங்களில் போலீசார் நடத்திய ரெய்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 539 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அது தொடர்பாக 5 பேரை கைது செய்தனர்.
சென்னை பட்டாபிராம், தண்டுரையில் உள்ள ஒரு மளிகைக் கடையில் குட்கா விற்பனை ரகசியமாக நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன்பேரில் அங்கு போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர். அதனையடுத்து மளிகை கடையின் உரிமையாளர் முருகன் (44), என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 319 கிலோ எடையுள்ள ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் குட்கா பான்மசாலா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
சங்கர்நகர் போலீசார் நேற்று முன்தினம் அனகாபுத்தூர், அண்ணாநகர், முதல் குறுக்குத் தெருவிலுள்ள மளிகைக்கடையில் ரெய்டு நடத்தினர். அப்போது அங்கு சட்டவிரோதமாக குட்கா விற்ற கடையின் உரிமையாளர் அனகாபுத்துாரைச் சேர்ந்த பிரசாந்த் (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள 2 மளிகைக் கடைகளில் குட்கா விற்பனை செய்த பொழிச்சலுார் செல்வராஜ் (34), ராமபாண்டியன் (61) அனகாபுத்தூர் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 110 கிலோ ஹான்ஸ் மற்றும் குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதே போல செம்மஞ்சேரி போலீசார் அங்குள்ள குமரன் நகர் சிக்னல், பாண்டிச்சேரி பாட்டை சாலை அருகில் 110 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். அதனை அங்கு விற்பனை செய்த தாழம்பூரைச் சேர்ந்த வேலுசாமி (வயது 43) என்பவரை கைது செய்தனர். நேற்று போலீசார் நடத்திய ரெய்டில் 3 இடங்களில் 539 குட்கா பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.