37 நாளில் சிக்கிய ரூ. 4.29 கோடி லஞ்சப் பணம்

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் கடந்த 37 நாட்களில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில் கணக்கில் வராத ரூ. 4.29 கோடி ரொக்கம்
மற்றும் 519 பவுன் தங்கம், 6 1/2 கிலோ வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

பண்டிகை காலத்தில் பரிசு, அன்பளிப்பு என்ற பெயரில் பொதுமக்களிடம் இருந்து அரசு அலுவலர்கள் ஏராளமாக பணம் வசூல் செய்வதாக வந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புப்போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதனையடுத்து கடந்த மாதம் முதல் லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் அரசு அலுவலகங்களில் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த மாதம் 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் (6.11.2020) வரை போலீசார் நடத்திய லஞ்ச ஒழிப்பு ரெய்டில் ரூ. 4 கோடியே 98 லட்சத்து 892 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

அது தொடர்பாக லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் தெரிவித்ததாவது:–  கடந்த மாதம் 1ம் தேதியன்று ஸ்ரீபெரும்புதுார் ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் நடத்திய ரெய்டில் ரூ. 3 லட்சத்து 81 ஆயிரத்து 600 பறிமுதல் செய்யப்பட்டது. கோவை, மேட்டுப்பாளையம் சப் – ரிஜிஸ்தர் அலுவலகத்தில் ரூ. 2 லட்சத்து 14 ஆயிரத்து 550, ஈரோடு தொழிற்சாலை மற்றும் பாய்லர் இயக்குநகரத்தில் ரூ. 1 லட்சத்து 61 ஆயிரத்து 500, வேலுார் மாசு கட்டுப்பாட்டு வாரிய மண்டல அலுவலகத்தில் ஒரே நாளில் நடத்திய ரெய்டில் ரூ. 33 லட்சத்து 73 ஆயிரம், மண்டல அதிகாரி வீட்டில் நடத்திய ரெய்டில் ரூ. 3 கோடியே 25 லட்சத்து 20 ஆயிரமும் சிக்கியது.

மேலும் கடந்த 1ம் தேதியன்று, சேலம், பத்திரப்பதிவு டிஐஜி அலுவலகத்தில் ரூ. 3 லட்சத்து 20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சென்னை அண்ணாநகரில் உள்ள டிஐஜி வீட்டில் ரூ. 13 லட்சம் மதிப்புள்ள 34 பவுன் தங்க நாணயங்கள், ரூ. 63 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 7 பேர் பெயரில் வங்கிக்கணக்கில் இருந்த ரூ. 1 கோடி பணம் இருப்புள்ள வங்கி பாஸ்புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் மதுரையில் சிவில் சப்ளைஸ் சிஐடியில் பணிபுரியும் இன்ஸ்பெக்டரின் வீட்டில் இருந்து 35 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே போல கடந்த 4ம் தேதியன்று சிவகங்கை சப் ரிஜிஸ்தர் அலுவலகத்தில் ரூ. 83 ஆயிரத்து 100, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள 11வது மண்டல அலுவலகத்தில் ரூ. 1 லட்சத்து 27 ஆயிரத்து 510 மற்றும் 5ம் தேதியன்று பல்லாவரம் முனிசிபல் அலுவலகத்தில் ரூ. 2 லட்சத்து 500 பறிமுதல் செய்யப்பட்டன. இறுதியாக நேற்று முன்தினம் சென்னை ஆலந்துார் தாலுகா அலுவலகத்தில் ரூ. 51 ஆயிரத்து 400, வேலுார் பஞ்சாயத்து அலுவலகத்தில் ரூ. 92 ஆயிரம், கரூர் உதவி தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் ரொக்கம் ரூ. 29 ஆயிரத்து 100 மற்றும் ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள புத்தாடைகள், புதுக்கோட்டை, கரம்பக்குடி சப் ரிஜிஸ்தர் அலுவலகத்தில் ரூ. 21 ஆயிரம், சேலம் தம்மம்பட்டியில் உள்ள சப்ரிஜிஸ்தர் அலுவலகத்தில் ரூ. 42 ஆயிரம் கணக்கில் வராத லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வகையில் கடந்த ஒரே மாதத்தில் தமிழகம் முழுவதும் 54 இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில் ரூ. 4 கோடியே 29 லட்சத்து 98 ஆயிரத்து 892 பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Translate »
error: Content is protected !!