சென்னை கமிஷனர் அலுவலகத்தில் குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கான 4 நாள் புத்தாக்கப்பயிற்சி இன்றுடன் முடிவு பெற்றது.
சென்னை நகரில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பாக காவல்துறை மற்றும் காவல் நல அதிகாரிகளுக்கு பயிற்சி போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்புப்பிரிவு துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் கடந்த 26ம் தேதியன்று தொடங்கியது. சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல வளமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் இந்த பயிற்சிகள் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மேற்கொண்ட இந்த முயற்சியின் மூலம் சென்னை நகரில் உள்ள 160 குழந்தைகள் நல காவல் அதிகாரிகள் (CWPO) மூலம் அனைத்து குழந்தைகளும் பயனடைய வழி வகை உள்ளதாக பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்புப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இந்த பயிற்சியில் கலந்து கொண்ட குழந்தைகள் நல அலுவலர்களுக்கு குழந்தைகள் பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டமான போக்சோ, சிறார் வன்கொடுமைத்தடுப்புச் சட்டம், குழந்தைத்திருமணங்கள் தடுப்புச்சட்டம், குழந்தைத் தொழிலாளர் தடுப்பு சட்டம் ஆகிய சட்டப்புத்தகங்கள் உள்பட பல்வேறு சட்டப்புத்தகங்கள் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகள் ஆகியவைகள் வழங்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக நடந்த இந்த பயிற்சி நிகழ்வு நேற்று 4வது நாளுடன் முடிவுற்றது.
இதில் கலந்து கொண்ட கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மதிப்புமிக்க கருத்துரைகளை வழங்கிய சமூக பாதுகாப்புத் துறை, சிறுவர் நீதிக்குழுமம், குழந்தைகள் நல கமிட்டி, மாவட்ட குழந்தைகள் நல அலகு, சைல்டு லைன் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்பட அனைத்து துறையினருக்கும் நினைவுப் பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார்.