நிவர் புயல் கரை கடந்ததை அடுத்து கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. நிலப்பரப்பில் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வரும் நிவர் புயல், தீவிர புயல் என்ற நிலையில் இருந்து புயலாக வலுவிழந்துள்ளது. இதன் காரணமாக விட்டு விட்டு கனமழை பெய்கிறது. இந்த புயல் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளது.
நிவர் புயல் தற்போது வட தமிழக கடலோரப் பகுதியில் புதுச்சேரிக்கு வட-வடமேற்கே மையம் கொண்டுள்ளது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 6 மணி நேரத்தில் மேலும் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கு அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறக்கூடும்.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவை கடலோர பகுதிகளில் காற்று மணிக்கு 70ல் இருந்து 80 கிமீ வேகத்திலும், இடையிடையே 90 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். இன்று மாலை காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து, மணிக்கு 50ல் இருந்து 60 கிமீ வேகத்திலும், இடையிடையே 70 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.
வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சூறாவளிக் காற்று வீசுவதால் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் வடதமிழக கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Like this:
Like Loading...