சென்னை நொளம்பூரில் நிலமோசடியில் ஈடுபட்ட 6 பேர் கும்பல் கைது

சென்னை, நொளம்பூரில் போலி ஆவணங்கள் மூலம் நிலமோசடியில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, முகப்பேர் மேற்கு, 1 வது பிளாக்கில் வசித்து வருபவர் ராஜேஸ்வரி (வயது 31). இவருக்கு நிலபுரோக்கர்கள் புருஷோத்தமன், ராஜேஷ் கடந்த சில மாதங்களுக்கு ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். இருவரும் சேர்ந்து முகப்பேர் பகுதியில் கும்பகோணத்தைசச் சேர்ந்த ராஜம் என்பவருக்கு சொந்தமான 640 சதுரஅடி காலி நிலம் விற்பனைக்கு உள்ளதாக ராஜேஸ்வரியிடம் தெரிவித்துள்ளனர். அது தொடர்பான நகல் ஆவணங்களை ராஜேஸ்வரியிடம் இருவரும் காண்பித்து அதன் விலை ரூ. 48 லட்சம் என தெரிவித்துள்ளனர். மேலும் புருஷோத்தமன், ராஜேஷ் ஆகிய இருவரும், நில உரிமையாளர் ராஜம் என்ற பெயரில் போலியான பெண் ஒருவரையும், சில நண்பர்களையும் அழைத்து கொண்டு, ராஜேஸ்வரியிடம் கடந்த மாதம் 16ம் தேதியன்று ரூ. 10 லட்சமும், 28ம் தேதியன்று ரூ. 5 லட்சமும் என மொத்தம் 15 லட்சம் ராஜேஷ்வரியிடம் வாங்கியுள்ளனர். இந்நிலையில் ராஜேஸ்வரி தான் வாங்கிய நிலத்தை பத்திரப்பதிவு செய்வதற்காக நேற்று முன்தினம் அம்பத்தூர் பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்றார். ஆவணங்களை சரிபார்த்த பத்திரப்பதிவு அலுவலக ஊழியர்கள் அந்த ஆவணங்கள் போலியானது என தெரிவித்தனர்.

அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி இது தொடர்பாக நொளம்பூர் போலீசில் புகார் அளித்தார். அண்ணாநகர் துணைக்கமிஷனர் ஜவகர் மேற்பார்வையில் நொளம்பூர் போலீசார் விசாரணை நடத்தி போலி ஆவணங்களை காட்டி ராஜேஷ்வரியிடம் மோசடியில் ஈடுபட்ட நில புரோக்கர்கள் புருஷோத்தமன் (60), மணலி நியூ காலனியைச் சேர்ந்த ராஜேஷ் (37), சுவாமி நாதன் (51), மற்றும் கும்பகோணம் நில உரிமையாளர் ராஜம் போல நடித்த தண்டையார்பேட்டையைச் சேர்ந்த திலகா (41), ஹேமலதா (45), கொளத்துார் பிரபாமாகாளி (51) ஆகிய 6 நபர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Translate »
error: Content is protected !!