நியூயார்க்,
பைசர் பயோடெக் நிறுவன தடுப்பூசியைத் தொடர்ந்து, அஸ்ட்ராஜென்கா நிறுவனத்தின், கொரோனா வைரஸ் தடுப்பூசியை, அவசர காலத்திற்கு பயன்படுத்திக்கொள்ள உலக சுகாதார அமைப்பு அனுமதி கொடுத்துள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தற்போது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் அமெரிக்காவின் பைசர் – பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மட்டுமே அவசர காலத்துக்கு பயன்படுத்திக்கொள்ள உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில், தற்போது உலக சுகாதார அமைப்பு, இரண்டாவது தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த அஸ்ட்ராஜென்கா நிறுவனத்தின், கொரோனா வைரஸ் தடுப்பூசியை, அவசர காலத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும், பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி இரு இடங்களில் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் சிரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா மற்றும் தென் கொரியாவிலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகளை அவசர காலத்துக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறோம் என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.