சென்னை கேகே நகரில் 30 அடி உயரத்தில் சிக்கித்தவித்த பூனையை 7 வயது சிறுவன் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று உயிருடன் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை, கேகே நகர், வன்னியர் தெருவில் மூன்றடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. அந்த குடியிருப்பில் வெளிர் கருப்பு நிறமுடைய பூனைக்குட்டி ஒன்று சுற்றித்திரிந்து வந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு சென்னையில் இரவு சமயத்தில் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அடுக்குமாடியில் 3வது மாடியில் உள்ள ஸ்லாபில் சிக்கித் தவித்த பூனைக்குட்டி 30 அடி உயரத்தில் உள்ள ஸ்லாபில் அது சிக்கிக் கொண்டதால் கீழே குதிக்க முடியாமல், இரவில் கடுமையான மழையிலும் மற்றும் காலையில் வெயிலிலிலும் சிக்கித் தவித்தது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் மீண்டும் மழை பெய்ததால் பூனை உதவி தேடி இரவு முழுவதும் மியாவ் மியாவ் என சப்தமிட்டபடி இருந்தது. நேற்று காலையில் பூனையின் மியாவ் சத்தத்தை கேட்ட இரண்டாவது தளத்திலுள்ள ஆரவ் என்ற 7 வயது சிறுவன் அதனைக் கண்டு மனம் வருந்தி தனது தந்தையை அழைத்து வந்து காட்டியுள்ளான். அவர்கள் அந்த பூனையை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. கடந்த இரண்டு நாட்களாக உணவின்றி தவித்த அந்த பூனைக்கு பால் மற்றும் பன், பிஸ்கட் வாங்கி கொடுத்துள்ளான்.
இதனைத் தொடர்ந்து சிறுவனும், அவனது தந்தையும் பூனையை காப்பாற்றுவதற்காக தனியார் புளூ கிராஸ் அமைப்பை தொடர்புகொண்டு உதவிக்கு அழைத்துள்ளனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் யாரும்வரவில்லை. இறுதியாக தீயணைப்புத்துறை கட்டுப்பாட்டு எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சென்னை, அசோக் நகர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து 7 தீயணைப்பு வீரர்கள் நேற்று காலையில் அந்த குடியிருப்புக்கு வந்தனர். சுமார் அரை மணி நேர போராட்டத்துக்கு பின்னர் பூனையை பத்திரமாக உயிருடன் மீட்டனர். பூனைதானே என்று அலட்சியமாக எண்ணாமல் அதையும் உயிராக மதித்து சம்பவ இடத்திற்கு வந்து பூனையை மீட்ட தீயணைப்பு துறையினரையும், பூனைக்கு மனித நேயத்துடன் உணவளித்த சிறுவனையும் அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.