கேட் தகராறில் எதிர் கோஷ்டியினரை வெட்டிய அதிமுகவினர்: சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு

சென்னை கொளத்துாரில் கிரில் கேட் அமைப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக அதிமுகவினர் எதிர்தரப்பினரை கத்தியால் வெட்டிய சிசிடிவி காட்சிகள் வாட்ஸ்அப்பில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, பெரம்பூர், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். அதிமுக 68வது வட்டச் செயலாராக உள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த காயத்ரி (52) என்ற பெண்ணுக்கும் இடையே வீட்டின் அருகில் உள்ள சந்து முனையில் கிரில்கேட் அமைப்பதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக வந்த புகாரின் பேரில் திருவிக நகர் போலீசார் இரு தரப்பினரையும் விசாரணைக்கு வரும்படி அழைத்து இருந்தனர்.  இந்நிலையில் ராமச்சந்திரன் தரப்பினர் நேற்று முன்தினம் காயத்ரியின் வீட்டுக்குள் புகுந்து கத்தி, உருட்டுக்கட்டை ஆயுதங்களால் பயங்கரமாக தாக்கினர். தடுக்க வந்த காயத்ரியின் சகோதரர் கிருஷ்ணகுமார் என்பவரையும் தாக்கியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும்
அவரது நண்பர் ராஜேஷ்குமார் என்பவருக்கு வலது தலை, கன்னம், இடது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக திருவிக நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிமுக பிரமுகர் ராமச்சந்திரன், அவரது சகோதரரும் கொளத்தூர் திமுக பகுதி இளைஞரணி துணை தலைவருமான தனசேகர், குணவதி, கேசவன், யோகாவினியா, கணேசன், கேபிள் டிவி கிருஷ்ணா மற்றும் 15 நபர்கள் சேர்ந்து கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கும் காட்சிகள் சிசிடிவி பதிவுகளை போலீசார் கைப்பற்றினர். அவை வாட்ஸ்அப்பில் நேற்று வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அதிமுக பிரமுகர் ராமச்சந்திரன், குணவதி, ராமச்சந்திரனின் மகனும் கல்லூரி மாணவருமான கிஷேவர், திமுக பிரமுகர் தனசேகர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!