சென்னை, செப். 13–
கேரள மாநில லாட்டரி சீட்டை சென்னையில் வாட்ஸ்அப் மூலம் விற்பனை செய்த பலே வாலிபர்கள் இருவரை சென்னை சைதாப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் பல இடங்களில் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை வாட்ஸ்அப் மூலம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. கமிஷனர் மகேஷ்குமார் உத்தரவின் பேரில் அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையில் உதவிக்கமிஷனர் அனந்தராமன், சைதாப்பேட்டை இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் சைதாப்பேட்டை, சுப்ரமணிய சுவாமி கோவில் தெருவில் கண்காணித்தனர். அப்போது அங்கு கருப்பு நிற ஹோண்டா இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களை சந்தேகத்தின் பேரில் மடக்கி விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் அவர்களது செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு நடத்தினர். அப்போது அவர்கள் வாட்ஸ்அப் மூலம் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரியவந்தது.
கேரளாவில் விற்கப்படும் லாட்டரி எண்களை கொண்டு வாட்சப் மூலம் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்தது. அதனையடுத்து பைக்கில் வந்த விஷ்ணு (24), மணிகண்டன் (20) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்திய
செல்போன், ஹோண்டா இருசக்கர வாகனத்தையும், லாட்டரி விற்ற பணமான ரூ. 15 ஆயிரம் ஆகியவற்றை கைப்பற்றினர். இருவரும் விசாரணைக்குப் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர்களை திறமையாக கண்காணித்து கைது செய்த அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையிலான சைதாப்பேட்டை தனிப்படை போலீசாரை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார்.