இந்தியாவின் சில மாநிலங்களில் கோரோனோ தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் கோரோனோ தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவாக்சின்’ தடுப்பு மருந்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், கடந்த ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் தடுப்பு மருந்து செலுத்தும் பணிகள் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக இந்தியா முழுவதும் சுகாதாரப் பணியாளர்களுக்கு கோரோனோ தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நேற்று (01.03.2021) முதல் 60 வயதைக் கடந்தவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கும் கோரோனோ தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (02.03.2021) உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கோரோனோ தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது. இதற்காக உச்சநீதிமன்ற வளாகத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன